Sunday, November 7, 2010

என் பிரார்த்தனை...

என் பிரார்த்தனை...

விமானங்கள் வேகம் என்று
யார் சொன்னது?
என் எண்ணங்கள் தான்
எத்தனை வேகமாகப் பயணிக்கிறது...



தீ் மட்டும் தான் எரிக்கும் 
என்று யார் சொன்னது?
இதோ பல மனங்கள் - பிரிவுத்
தீயினில் சத்தமில்லாமல்
நித்தமும் எரிகிறது...


எரிந்தால் மட்டும் தான்
கருகும் வாசனை வரும் என்று
யார் சொன்னது?
காற்றினில் கலந்திருக்கிறது
பசியினில் கருகும் -

குடலின் வாசனை...


மரணத்தின் பிரிவுகளாய் - இயற்கையும்
அகாலமும் தான் என்று
யார் சொன்னது? - இங்கு
சிலர் மரணமடைந்தபடி
நடைப்பிணமாய் வாழ்கிறார்களே!
அவர்கள் எந்த மரணத்தை எய்தினார்கள்
என்று அவர்களுக்கே புரியவில்லையே! 


இழந்து போன வாழ்க்கையை
இன்னும் தேடுகிறது பல நெஞ்சங்கள்...
குண்டுகள் மட்டும் அல்ல - ஏக்கங்களை
சுமந்த அந்த விழிகளும் தான்
என் நெஞ்சை துளைக்கிறது...

வெற்றிகளைக் கொண்டாட
புதிய முறை ஒன்று
அறிமுகமாகிறது இன்று - நிர்வாணம்!
ஆடைகளைத் தேடி சில உடல்கள்
அங்கே அலையும் போதெல்லாம்

இதோ எம் பெட்டிக்குள் உடலைத்
தேடிய படி சில ஆடைகள்..


தாய் மானம் காக்க நினைத்த  -பல
நெஞ்சங்கள் இன்று தன் மானம்
காக்க முடியாத நிலையில் -
நிர்வாணமாய், நிர்க்கதியாய்,
பேச வார்த்தைகள் இன்றி,
வடிக்க கண்ணீர் இன்றி,
அவமானத்தில் உடல் துடிக்க,
ஆத்திரத்தில் நெஞ்சு துடிக்க,
பசியினில் வயிறு துடிக்க,
மரணத்தின் வாயிலில் நின்றாலும்
அவள் வரவு ஏன் இன்னும்
தாமதம் என்று எண்ணங்கள் துடிக்க,
வாடும் - இள நெஞ்சங்களுக்காய்
நானும் ஒரு கணம் பிரார்த்தனை செய்கிறேன்
எமதர்மன் அவர்களை விரைவாய்
அரவணைக்கட்டும் என்று...


நன்றி
என்றும் அன்புடன்
சுகர்னியா

(2009/10/01)  

2 comments:

  1. மிகவும் நன்றாக உள்ளது. நம் நடைமுறை வாழ்க்கைக்கு கவிதை ஒரு கண்ணாடி பிடிக்கிறது.இறுதி பந்தியை முன்னைய பந்திகள் மாதிரி போட்டால் நன்றாக இருக்கும். இளையவர்கள் மீது ஏன் இவ்வளவு கோபம் .

    ReplyDelete