Friday, April 1, 2011

அப்பா!!!

அப்பா எனும் அன்பு
கண்விழித்த கனவாய்
கலைந்து சென்றபின்பும் - என்
கண்ணீரைத் தட்டிவிட்டு
கற்பனைக்குள் தேடினேன்...

தேடித் தேடியே மீண்டும்

களைப்பில் கண்ணயர்ந்த போது
கனவுகள் தொடர்ந்தது - ஆனால்
விழித்துப் பார்த்தேன்...
இன்னும் கலையவில்லை என் கனவு...
ஒருவேளை இது
கானல் நீராக இருக்குமோ???


என்றும் அன்புடன்
சுகர்னியா

(2010/01/02)

பழையதில் ஒரு பார்வை... (2007/09/24)

என் கண்ணீர் துளி பட்டு
கலங்கிப் போன எழுத்துக்களாலும்,
கசங்கித் தன் வாழ்க்கையை மாய்த்த
காகிதத் துண்டுகளாலும்,
விழிநீரின் உப்புக் கரிப்பில்
அரிப்பாகிப் போன கன்னங்களாலும்,
என்னை தழுவியே ஈரப்பதன்
கூடிப்போன தென்றற் காற்றினாலும்,
என் கால்களைத் தீண்டியே
கொதிநீராகிய அலைக் குழந்தையினாலும்,
என் மனக் குழப்பங்களுக்கும்,
கண்ணீரின் புலம்பல்களுக்கும்
விடை தர முடியுமா?


இன்றல்ல, நேற்றல்ல,
இரண்டு தசாப்தங்களாய்
வேதனைத் தீயினில்,
வெந்து கருகிய மலராக
மிதிபட்டுக் கிடந்தபோதும்
புதிதாக எந்தத் தீயிற்கு
பயப்பட்டுத் துடிக்கிறதோ?
இந்த மனது...


மனித மனங்களை நேசிக்கத் தெரியாத
அப்பாவிப் பேதைக்கு மலர்களும்
முள்ளாகத் தெரிவதும் ஏனோ?


அழகான மலராய் என் மனம்
மலர்ந்திருந்தால் தெய்வத்தின்
காலடி தஞ்சமாகிப் போயிருக்கும்...
மனமெங்கும் இத்துப்போன
நினைவுப் புதையல்களையே தேக்கிவைத்து
அழகு பார்க்கும் போது - நரகம்
கூட எட்டித்தான் போகும்...


சுஜா!!!
நீ ஒரு கொடியாய் இருந்தால்
படர்வதற்கு மரம் வேண்டும்...
நீ மரமாகி வாழு...
உன்மேல் பல கொடிகள் படரட்டும்...
பரவாயில்லை... பற்று வை...
கொடிமேல் அல்ல... அந்த
வானத்தின் மேலே...


உதிர்ந்து விழும் இலை பார்த்து
மனம் நொந்து போகாதே - ஏனெனில்
இன்னும் சிலநாளில் நீயும் தான்...


தனிமை...........
அது பலருக்குமே புரியாத மெல்லிசை...
கண்மூடி ரசிக்கப் பழகு...
கண்ணீர்த்துளி காணாமல் போகும்...


என்றும் அன்புடன்
சுகர்னியா
(2007/09/24)

நன்றி...

ஆயிரம் தடவைகள்
தவறாது முயன்றும் - என்
தொண்டைக்குழிக்குள்ளேயே
தோற்றுப்போகுதே - இந்த
"நன்றி " என்ற ஒற்றை வார்த்தை...


வார்த்தைகள் சிறுமைப்படுத்தி
விடுமோ என்று ஒரு பக்கம் - இந்த
ஒற்றை வார்த்தை நம் நட்பை
குறைத்துக்காட்டுமோ என்று இன்னொரு பக்கம்,
நன்றி மட்டும் போதுமா என்று மறு பக்கம்,
போராடும் என் நெஞ்சின் ஓசைகள் - என்
பேனா வழி கசிந்து - உங்கள்
கண்களை ஸ்பரிசிக்க
காத்திருக்கிறது தோழிகளே...


அழகிய மலராக,
அன்பு மொழியாக,
நறுமணமாக, இன்சுவையாக,
இறுதியில் நல்ல நண்பர்களாக -
கடவுள் எம்மை தழுவுவாராம்
சித்தர்கள் சொன்னார்கள்.
ஆம் - என்னையும் கடவுள் தழுவியிருக்கிறார்
என் நண்பிகள் ஊடாக...


கண்களில் கசியும் என்
கண்ணீருக்கு - பேராறுதல்
சொல்லும் - என் தலையணை...
அது தலையணை அல்ல - எனக்கு
எதற்கும் இணையே இல்லா
பெரும் அரவணை(ப்பு) - என்று
புரியுமா அதற்கு???


ஊடல்கள் எமை அப்பப்போ தழுவினாலும்
கூடல்கள் எமை ஆங்காங்கே வருடிவிட,
காலமிட்ட கட்டளைப்படி
கலைந்து செல்லும் நேரம்
கண்ணெதிரே இருந்தாலும்,
என்றும் எம் மனத்தால்
ஒன்றுபட்டிருக்க - ஒவ்வொரு
நிமிசமும்
பொக்கிஷம் தான் நமக்கு...


என்ன சொல்வது???
இதுவும், இன்றைய நாளும்
கூட ஒரு பொக்கிஷம் தான்... ஆனாலும்
இப்போதும் தோற்றுவிட்டேன்
என் நன்றிகளை சொல்லிவிட...
அன்பில் தோற்பவன் தானாம்
வெற்றியாளன்... அதனால் இங்கு
தோல்வியும் வெல்கிறதாய்
சில கனவுகள் என்னுள்ளே...
நிஜமாக்க நீங்கள் வருவீர்கள் என்று...
நன்றி


2011/04/01