Thursday, November 4, 2010

அது ஒரு அழகிய காலம்...

அது ஒரு அழகிய காலம்...


கலை நிகழ்வின் கதாநாயகியாம்
கலைமகளிற்கு என் முதல் வணக்கம் - இந்த
கவியரங்கின் கதாநாயகனாம் - ஸ்ரீ
கரன் அண்ணாவிற்கும் என் கவி வணக்கம்.
ஏதேதோ சொல்லவென்று - நெஞ்சோடு
கவி சுமந்து, சொல்லோடு சுதி சேர்க்க
வந்திருக்கும் என் சகாக்களுக்கு ஒரு வணக்கம்.
என்னென்னவோ சொல்கிறார்கள் - என்ன?
என்று தான் கேட்போமே என்று
மூச்சிரைக்க ஓடி வந்திருக்கும்
அவையினருக்கும் நல் வணக்கம்...
எனக்கு சொல்லலையே என்று
எவரேனும் முகம் சுழித்தால்,
சொல்ல மறந்தேன் - எனை மன்னிப்பாயா?
என்று மரியாதையுடன் பல் வணக்கம்...


கவியரங்கம் செய்ய வேணும்
கவி பாட வா என்று
கனிவோடு அழைத்தார்கள்.
தலையங்கம் எதுவென்று
தலைவரை நான் கேட்டேன்
"அது ஒரு அழகிய காலம்" என்றார்.
தலையை சொறிந்து விட்டு
"எது ஒரு அழகிய காலம்" என்றேன்.
இதுவரை அது எது என்று
பதில் ஏதும் கிடைக்கவில்லை...




தாயின் கருவறைக்குள்
நித்தமும் சேட்டை செய்தபடி
சத்தமின்றி சயனித்த அந்தக் காலமோ?
மண் தரையில் பிறந்து
தாயின் மடியில் தவழ்ந்து
மண் சோறு சாப்பிட்ட அந்தக் காலமோ?


வாழ்க்கை எதுவென்றும்
வண்ணங்கள் பலவென்றும்
புரியாத வயதில் - இது
என் மேசை, அது என் கதிரை,
அவ என் டீச்சர் - என்று
சில்லறை சண்டைகள்
போட்ட - பள்ளிப் பருவம் தான்
அந்த அழகிய காலமோ?


பல வண்ணப் பூக்களிலே
எந்தன் பூ எங்கே என்று
தேடி அலையும் பட்டாம்
பூச்சியாய் - எட்டு வைத்த
யௌவனப் பருவம் தான்
அந்த அழகிய காலமோ?


என்ர டீச்சர் இல்லாமல்,
என்ர பிரண்ட்ஸ் இல்லாமல்,
 என்ர ஸ்கூல் இல்லாமல்
எப்படி நான் இனி..... என்று
கண்ணீர் சிந்திய காலங்களும்,
அந்த அக்கா கம்பசுக்கு
போபோறா என்று - ஊர்
முழுக்க கதை பேச - ஏதோ
நிலாவுக்கே போபோற மாதிரி
சைக்கிளில் பவனி வந்த
காலங்களும் கூட ஓர் அழகிய காலம் தானோ?


ராகிங் இற்கு பயத்தில,
அண்ணாமாரைக் காணும் போதெல்லாம்
அர்த்தமே இல்லாமல் - ஆயிரம் அண்ணா சொல்லி
அத்தனை பல்லும் தெரிய
அசட்டுச் சிரிப்புக்களை உதிர்த்துப் போன
காலங்களும் கூட ஓர் அழகிய காலம் தானோ?


எப்படா கம்பஸ் முடியும்?
என்று புலம்பியவர்கள் எல்லாம்
வேலைக்குப் போனபின் - ஒரு பாடம்
பெயில் வந்தாலும் பரவாயில்லடா...
கம்பசில் இன்னும் கொஞ்சம்
விடமாட்டாங்களா? என்று
புலம்புவதைக் கேட்கும் பொழுதுகள் கூட
ஓர் அழகிய காலம் தானா?


சத்தமின்றி மரணித்துப் போன
எம் அவலங்களையும்...
சாகாவரம் கொண்ட நம்
சாதனைச் சுவடுகளையும்...
நினைத்துப் பார்த்தால்
கண்கள் பனித்தாலும் - நெஞ்சில்
ஊற்றெடுக்கும் உத்வேகமான
சிந்தனைப் பொழுதுகளும் கூட
அழகிய காலங்களா?????


புதை குழிக்குள் மூடாமலே
புதையுண்ட உறவுகளின்,
தீயை மூட்டாமலே
கருகிப் போன தோழர்களின்,
நினைவுப் புதையல்களை
முட்கம்பிகளின் இடையில்
பத்துநிமிட இடைவெளியில்
பகிர்ந்து கொண்ட காலங்களும்,
எந்த ஆறுதல் வார்த்தைகளும்
ஆராதிக்காது என்பதால் - மௌனமாய்
விழியில்  மழை பெய்து,
விடை பெற்ற காலங்களும் - இன்று


சரித்திரங்கள் மறைக்கப்பட்டு,
சாதனைகள் மறக்கப்பட்டு,
கண்துடைப்பு நிகழ்ச்சிகளில்
களியாட்டம் பல போட்டு,
இல்லாத வானத்தில்
இறக்கைகள் பல கொண்டு,
பறந்தாடும் இந்நாளும்
காலங்களில் அழகு தானா????? 


ஐயகோ!!!
காலச் சக்கரங்கள் - வெறும்
வார்த்தைகளுக்குள் மட்டுப்படுவதில்லையே..
இத்தனை சல்லடை செய்தும்
அழகிய காலம் எதுவென்று
அரங்கேற்ற முடியவில்லையே...
ஆம்... உண்மை தான்...
அழகிய காலங்களைத் தேடியும்,
காலங்களில் அழகைத் தேடியும்,

அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சையாக,
அலையும் எம் பொழுதுகள் எல்லாம்
அந்தரங்க மேடையில் வினா தொடுத்து
ஏக்கங்கள்
மட்டுமே விடைகளாகி
பெருமூச்சொன்று தொடரும்... என்றாகிறது
அது ஒரு அழகிய காலத்தில்...



நன்றி
என்றும் அன்புடன்
சுகர்னியா
( நவராத்திரி விழா, 
மொறடுவை பல்கலைக்கழகம்)
2010/10/15 

2 comments:

  1. வலைப்பதிவு வருகைக்கு வணக்கங்கள்.
    எழுத்தை Bold செய்யுங்கள் அல்லது பின்னணியை மாற்றுங்கள்... வாசிப்பதில் சற்று சிரமமாக இருக்கிறது. Comment செய்வதற்கு Word verification ஜ யும் இல்லாமல் செய்வது நல்லம்.

    கவிதை நன்றாக உள்ளது. வலைப்பதிவில் இன்னமும் எழுத வாழ்த்துகள்.

    மா.குருபரன்

    ReplyDelete
  2. நன்றி அண்ணா...

    ReplyDelete