Thursday, November 4, 2010

எனது நாட்குறிப்பு...

எனது நாட்குறிப்பு...

என் எண்ணக் கனவுகளில்
மிதக்கும் வண்ணக் கனவுகளை
எழுதிப் பார்த்திட துடிக்குது
என் சின்ன மனது...

கையினில் பேனா...
கண்ணெதிரே வெற்றுத்தாள்...
தலைக்கு மேல் மின்விசிறி...
எனக்கடியில் பஞ்சு மெத்தை...
சிந்தனை மட்டும் ஏனோ
இன்னும் எட்டாத வானத்திலே
வலம் வந்து கொண்டிருக்கிறது...

வாழ்க்கை பற்றிய சில கனவுகளும்
வாழ்க்கையில் திணிக்கப்பட்ட சில கோட்பாடுகளும்
வாழ்வினில் செய்து முடிக்க வேண்டிய கடமைகளும்
வாழ்வினில் தொட வேண்டிய சில சிகரங்களும்
கண்ணெதிரே கற்பனைகளாயும்
கண்ணீர் சிதறல்க
ளாயும்
சிதையுண்டு கொண்டிருக்கிறதா? இல்லை
சிற்பமாகிக் கொண்டிருக்கிறதா?
என்றே தெரியவில்லை எனக்கு...


நேற்று பார்த்த என் முகங்களை
இன்று காணவில்லை - கடைசிவரை
காணக் கிடைக்கவும் இல்லை...
இன்று தோன்றி இருக்கும் - மலர்களையும் கூட
முட்களின் நடுவில் தான்
சந்திக்க முடிகிறது...

நாளை இந்த மலர்களை
மாலையக்கிப் பார்க்கத் துடிக்கும்
என் மனதும் - மலர்வளையமாய்
மாறிப் போன பிரிவின் வலிப்பும்
ஒன்றோடு ஒன்று முட்டி மோதி
கண்ணீர் துளிகள் நினைவின்
வெப்பத்திலேயே ஆவியாகிப் போகிறதே...


என்ன கொடுமை இது!
அடிமேல் அடி அடித்து
முதுகெலும்பு நிமிர்வை
மறந்து விட்டது போலும்...
லிமேல் வலி தாங்கி
இதயம் பாறை
யாய் கனக்கிறது...
கனவுகளில் எல்லாம் பிணங்களின்
வாடைகளை சுமந்த காற்று
ரத்தத்தை ஸ்பரிசிக்கிறது...
மரண ஓலங்கள் இன்னும்
காதுகளில் ரீங்காரமிடுகிறது...
 

என்ன இது? பயங்கரக் கனவோ
என்று கண் விழிக்க நினைக்கிறேன்,
முடியவில்லை - ஏனெனில்
என் கண்கள் தான் இன்னும்
மூடவேயில்லையே...
உதிர்ந்து போன உறவுகள்
சொன்ன பாடங்கள் தான் - இனி
என் வேதங்கள்...
அவர்கள் விட்டுப் போன
எச்சங்கள் தான் இனி
என் விழுதுகள்...
உடல் வலி தாள முடியாமல்
மரண தேவதையை கூவி
அழைக்கும் போதெல்லாம்
"
அக்கா" என்ற தீனமான
குரல் ஒன்று காதோரம்
கேட்கிறது - பசிக்குது என்று...

ஒவ்வொரு கணமும் சிரித்துப் பேசினாலும்
தனிமையில் வெப்பம் கக்கும்
என் நினைவுகளுக்கு எப்போது
சுதந்திரதினம்?

என் சின்ன தேவதைகளை
இந்த பூமியில் நிலை நிறுத்தவும்
வாழவும் கற்றுக் கொடுத்த
பின்பாவது நான்
விடுதலை ஆவேனா?

மரணத்தின் பின்பு தான்
மானுடத்தின் நிம்மதி என்றால்
ஆவிகளின் உலகம் எப்படி
தோன்றி இருக்கும்?

காலம் மாறும் என்று
காத்திருந்த காலம் எல்லாம்
கனவுகளாய் கலைந்த பின்னும்
கலங்கரை விளக்கம் ஒன்று
காலம் தோற்றுவிக்கும் - என்ற
கலையாத எம் கனவுகள்
எப்போது விழித்தெழும்?

வசந்தங்கள் வாழ்வினில்
நாளை உதயமானாலும்
வாழ்வதற்கு இந்த பூமியில்
யாருமில்லை - பாவிகளை தவிர...

இடங்கள் மாறி, உறவுகள் மாறி,
உணவுகள் மாறி, பாடங்கள் மாறி,
பாசங்கள் மாறி, பாத்திரங்கள் மாறி,
இப்படி எல்லாமே மாறிவிட்டது
அடிமை என்ற ஒன்றைத் தவிர...

இப்போதெல்லாம் கனவுகளுக்கு கூட
இடமளிப்பதில்லை - ஏனெனில்
அதில் கூட எலும்புக்கூடுகள்
தான் நடமாடுகிறது...

என் கடமைகள் சிறப்பாய் முடியட்டும்.
என் உறவுகள் கண்ணீர் காயட்டும்.
என் தேவதைகள் மனம் குளிரட்டும்.
புன்னகை மலர்களை அள்ளி வீசட்டும்.

இத்தனை நாள் வழி நடத்திய
ஆண்டவன் இன்றும் என்றும்
எனை வழி நடத்தட்டும் - என்
கடமைகளின் வெற்றியை நோக்கி...
 

நன்றி
என்றும் அன்புடன்
சுகர்னியா

2009/09/13  

2 comments:

  1. Nice...
    its awesome...
    keep it up..

    But i can feel ur worries...
    Dot worry everything ll be fine...
    @_@

    ReplyDelete