Friday, April 1, 2011

பழையதில் ஒரு பார்வை... (2007/09/24)

என் கண்ணீர் துளி பட்டு
கலங்கிப் போன எழுத்துக்களாலும்,
கசங்கித் தன் வாழ்க்கையை மாய்த்த
காகிதத் துண்டுகளாலும்,
விழிநீரின் உப்புக் கரிப்பில்
அரிப்பாகிப் போன கன்னங்களாலும்,
என்னை தழுவியே ஈரப்பதன்
கூடிப்போன தென்றற் காற்றினாலும்,
என் கால்களைத் தீண்டியே
கொதிநீராகிய அலைக் குழந்தையினாலும்,
என் மனக் குழப்பங்களுக்கும்,
கண்ணீரின் புலம்பல்களுக்கும்
விடை தர முடியுமா?


இன்றல்ல, நேற்றல்ல,
இரண்டு தசாப்தங்களாய்
வேதனைத் தீயினில்,
வெந்து கருகிய மலராக
மிதிபட்டுக் கிடந்தபோதும்
புதிதாக எந்தத் தீயிற்கு
பயப்பட்டுத் துடிக்கிறதோ?
இந்த மனது...


மனித மனங்களை நேசிக்கத் தெரியாத
அப்பாவிப் பேதைக்கு மலர்களும்
முள்ளாகத் தெரிவதும் ஏனோ?


அழகான மலராய் என் மனம்
மலர்ந்திருந்தால் தெய்வத்தின்
காலடி தஞ்சமாகிப் போயிருக்கும்...
மனமெங்கும் இத்துப்போன
நினைவுப் புதையல்களையே தேக்கிவைத்து
அழகு பார்க்கும் போது - நரகம்
கூட எட்டித்தான் போகும்...


சுஜா!!!
நீ ஒரு கொடியாய் இருந்தால்
படர்வதற்கு மரம் வேண்டும்...
நீ மரமாகி வாழு...
உன்மேல் பல கொடிகள் படரட்டும்...
பரவாயில்லை... பற்று வை...
கொடிமேல் அல்ல... அந்த
வானத்தின் மேலே...


உதிர்ந்து விழும் இலை பார்த்து
மனம் நொந்து போகாதே - ஏனெனில்
இன்னும் சிலநாளில் நீயும் தான்...


தனிமை...........
அது பலருக்குமே புரியாத மெல்லிசை...
கண்மூடி ரசிக்கப் பழகு...
கண்ணீர்த்துளி காணாமல் போகும்...


என்றும் அன்புடன்
சுகர்னியா
(2007/09/24)

1 comment:

  1. நினைவுகளை தேடாதே
    அது உன் மனதின்
    ஆழத்தில் இருக்கு.

    தெரியாமல் செய்தவைகள்
    இன்று எம் மனங்களுக்கு
    மருந்தாகின்றது.

    மறக்க தெரிந்திருந்தால்
    நாடு நாடாக நம் உறவு
    விளித்திருக்குமா ???????

    செல்ல சண்டைகள்
    நடக்குமா போனில்
    சில்லறை சிரிப்புத்தான்
    நடக்குமா ஸ்கைப்பில்

    மனங்கள் விழித்திருந்தால்
    யார்தான் உறங்கவைக்க
    முடியும் எம் இனிய
    சொந்தங்களை.

    தொடரும் எம் நட்பு
    தொலைவில் இருந்தாலும்.
    தேடிய கண்கள் தரிசனம் பெறும்.

    உங்களுடன்
    அரிசோபா.க

    ReplyDelete