Friday, April 1, 2011

அப்பா!!!

அப்பா எனும் அன்பு
கண்விழித்த கனவாய்
கலைந்து சென்றபின்பும் - என்
கண்ணீரைத் தட்டிவிட்டு
கற்பனைக்குள் தேடினேன்...

தேடித் தேடியே மீண்டும்

களைப்பில் கண்ணயர்ந்த போது
கனவுகள் தொடர்ந்தது - ஆனால்
விழித்துப் பார்த்தேன்...
இன்னும் கலையவில்லை என் கனவு...
ஒருவேளை இது
கானல் நீராக இருக்குமோ???


என்றும் அன்புடன்
சுகர்னியா

(2010/01/02)

பழையதில் ஒரு பார்வை... (2007/09/24)

என் கண்ணீர் துளி பட்டு
கலங்கிப் போன எழுத்துக்களாலும்,
கசங்கித் தன் வாழ்க்கையை மாய்த்த
காகிதத் துண்டுகளாலும்,
விழிநீரின் உப்புக் கரிப்பில்
அரிப்பாகிப் போன கன்னங்களாலும்,
என்னை தழுவியே ஈரப்பதன்
கூடிப்போன தென்றற் காற்றினாலும்,
என் கால்களைத் தீண்டியே
கொதிநீராகிய அலைக் குழந்தையினாலும்,
என் மனக் குழப்பங்களுக்கும்,
கண்ணீரின் புலம்பல்களுக்கும்
விடை தர முடியுமா?


இன்றல்ல, நேற்றல்ல,
இரண்டு தசாப்தங்களாய்
வேதனைத் தீயினில்,
வெந்து கருகிய மலராக
மிதிபட்டுக் கிடந்தபோதும்
புதிதாக எந்தத் தீயிற்கு
பயப்பட்டுத் துடிக்கிறதோ?
இந்த மனது...


மனித மனங்களை நேசிக்கத் தெரியாத
அப்பாவிப் பேதைக்கு மலர்களும்
முள்ளாகத் தெரிவதும் ஏனோ?


அழகான மலராய் என் மனம்
மலர்ந்திருந்தால் தெய்வத்தின்
காலடி தஞ்சமாகிப் போயிருக்கும்...
மனமெங்கும் இத்துப்போன
நினைவுப் புதையல்களையே தேக்கிவைத்து
அழகு பார்க்கும் போது - நரகம்
கூட எட்டித்தான் போகும்...


சுஜா!!!
நீ ஒரு கொடியாய் இருந்தால்
படர்வதற்கு மரம் வேண்டும்...
நீ மரமாகி வாழு...
உன்மேல் பல கொடிகள் படரட்டும்...
பரவாயில்லை... பற்று வை...
கொடிமேல் அல்ல... அந்த
வானத்தின் மேலே...


உதிர்ந்து விழும் இலை பார்த்து
மனம் நொந்து போகாதே - ஏனெனில்
இன்னும் சிலநாளில் நீயும் தான்...


தனிமை...........
அது பலருக்குமே புரியாத மெல்லிசை...
கண்மூடி ரசிக்கப் பழகு...
கண்ணீர்த்துளி காணாமல் போகும்...


என்றும் அன்புடன்
சுகர்னியா
(2007/09/24)

நன்றி...

ஆயிரம் தடவைகள்
தவறாது முயன்றும் - என்
தொண்டைக்குழிக்குள்ளேயே
தோற்றுப்போகுதே - இந்த
"நன்றி " என்ற ஒற்றை வார்த்தை...


வார்த்தைகள் சிறுமைப்படுத்தி
விடுமோ என்று ஒரு பக்கம் - இந்த
ஒற்றை வார்த்தை நம் நட்பை
குறைத்துக்காட்டுமோ என்று இன்னொரு பக்கம்,
நன்றி மட்டும் போதுமா என்று மறு பக்கம்,
போராடும் என் நெஞ்சின் ஓசைகள் - என்
பேனா வழி கசிந்து - உங்கள்
கண்களை ஸ்பரிசிக்க
காத்திருக்கிறது தோழிகளே...


அழகிய மலராக,
அன்பு மொழியாக,
நறுமணமாக, இன்சுவையாக,
இறுதியில் நல்ல நண்பர்களாக -
கடவுள் எம்மை தழுவுவாராம்
சித்தர்கள் சொன்னார்கள்.
ஆம் - என்னையும் கடவுள் தழுவியிருக்கிறார்
என் நண்பிகள் ஊடாக...


கண்களில் கசியும் என்
கண்ணீருக்கு - பேராறுதல்
சொல்லும் - என் தலையணை...
அது தலையணை அல்ல - எனக்கு
எதற்கும் இணையே இல்லா
பெரும் அரவணை(ப்பு) - என்று
புரியுமா அதற்கு???


ஊடல்கள் எமை அப்பப்போ தழுவினாலும்
கூடல்கள் எமை ஆங்காங்கே வருடிவிட,
காலமிட்ட கட்டளைப்படி
கலைந்து செல்லும் நேரம்
கண்ணெதிரே இருந்தாலும்,
என்றும் எம் மனத்தால்
ஒன்றுபட்டிருக்க - ஒவ்வொரு
நிமிசமும்
பொக்கிஷம் தான் நமக்கு...


என்ன சொல்வது???
இதுவும், இன்றைய நாளும்
கூட ஒரு பொக்கிஷம் தான்... ஆனாலும்
இப்போதும் தோற்றுவிட்டேன்
என் நன்றிகளை சொல்லிவிட...
அன்பில் தோற்பவன் தானாம்
வெற்றியாளன்... அதனால் இங்கு
தோல்வியும் வெல்கிறதாய்
சில கனவுகள் என்னுள்ளே...
நிஜமாக்க நீங்கள் வருவீர்கள் என்று...
நன்றி


2011/04/01

Thursday, December 30, 2010

சாயி ராம்...


சாயி ராம்... 
( பாடலாக எழுதியது... )

சாயி சாயி சாயி ராம்
சாயி பாபா சாயி ராம் (2)

அன்னையும் நீயே தந்தையும் நீயே
ஆதரிக்கும் அந்த தெய்வமும் நீயே (2)
உன் அடி தேடி வந்தவள் நானே (2)
அணைத்திட வேண்டும் ஐயனே நீயே (2)

சாயி சாயி சாயி ராம்
சாயி பாபா சாயி ராம் (2)

(அன்னையும் நீயே.......)
எங்கு நான் போனாலும்
இங்கு நான் மறைந்தாலும் (2)
உனக்காக வாழ்ந்திருப்பேன் - என்
காலங்கள் தோற்றிருப்பேன்...
கால்கள் தான் கடுத்தாலும்
கண்ணில் நீர் வழிந்தாலும் (2)
உனக்காகக் காத்திருப்பேன் - என்
பூவிழி பூத்திருப்பேன்...
உயிருக்குள் உயிராகி
உறவுக்குப் பொருளாகி
(2)
நினைவுக்குள் முடிசூடி
கனவுக்குள் கருவாகினாய் - என்
கனவுக்குக் கருவாகினாய்...
பாதை தவறாகிப் போனாலும் - உன்
பாசம் வழி நடத்தும் எந்நாளும்...
(2)
வாடினேன் தேடினேன்
ஓடினேன் பாதங்கள் நாடுகின்றேன்
பாபா - உன் பாதங்கள் நாடுகின்றேன்...
சாயி சாயி சாயி ராம்
சாயி பாபா சாயி ராம் (2)

(அன்னையும் நீயே.......)
நேற்றைய பொழுதெல்லாம்
பிரிவாகிப் போனாலும்
(2)
நாளை நான் சேர்ந்திருப்பேன் - உன்
நாமங்கள் பாடி நிற்பேன்...
தொலைவில் நீ இருந்தாலும்
பாராமல் சென்றாலும்
(2)
பக்கத்தில் பார்த்திருப்பேன் - மலர்
பாதங்கள் தாங்கி நிற்பேன்...
அன்புக்கு மொழி தந்த
ஐயனும் நீதானே...
(2)
பக்திக்கு முத்தி தந்த
பார்த்தனும் நீதானே - அந்த
பார்த்தனன் நீதானே...
விதிகள் சதிகள் பல செய்தாலும் - உன்
நாமம் காத்து வரும் எந்நாளும்...
(2)
பூ ஒன்று வாடுது
தேடுது கிளை கொண்ட வேரினையே - அது
கிளை கொண்ட வேரினையே...
சாயி சாயி சாயி ராம்
சாயி பாபா சாயி ராம் (2)
(அன்னையும் நீயே.......)

2010...

பல கனவுகளோடு தொடங்கிய 2010
பல கனவுகளை நிறைவேற்றியும்,
பல கனவுகளை சிதைத்து விட்டும்,
பல கனவுகளை உருவாக்கி விட்டும்,
இனிதே நிறைவேறும் நேரமிது...


நிழல்களும் நிஜங்களும்
மௌனமாய் போராடும் நேரமிது...
நம்பிக்கைகளும் நடப்புகளும்
வேறுபட்டு ஏமாறும் நேரமிது...
கலைகளும் கலாச்சாரங்களும்
காணாமல் போகும் வேளை இது...


கனவுகள் கல்லறைகளான போதும்
கலங்காத எம் நெஞ்சம்  - அந்த
கல்லறைகள் கலைக்கப்பட்ட போது
கலங்கிப் போனதும் இந்தப் பத்தில் தான்...


கடந்து போனவைகள் எப்போதும்
கடந்தவைகள் தான்...
கழிந்த 2010 இல் காணாமல்
போனவைகள், போனவர்கள்
எல்லாம் அத்திவராமாகி
மீண்டும் ஒரு அழகிய
காலம் மலரட்டும் இனி...


அனுபவங்கள் பல தந்த
ஆண்டுக்கு அழகாய்
நன்றி சொல்லிப் பிரிகிறேன்
இரண்டாயிரத்துப்பத்தை...


என்றும் அன்புடன்
சுகர்னியா
(31/12/2010)

Sunday, November 7, 2010

என் பிரார்த்தனை...

என் பிரார்த்தனை...

விமானங்கள் வேகம் என்று
யார் சொன்னது?
என் எண்ணங்கள் தான்
எத்தனை வேகமாகப் பயணிக்கிறது...



தீ் மட்டும் தான் எரிக்கும் 
என்று யார் சொன்னது?
இதோ பல மனங்கள் - பிரிவுத்
தீயினில் சத்தமில்லாமல்
நித்தமும் எரிகிறது...


எரிந்தால் மட்டும் தான்
கருகும் வாசனை வரும் என்று
யார் சொன்னது?
காற்றினில் கலந்திருக்கிறது
பசியினில் கருகும் -

குடலின் வாசனை...


மரணத்தின் பிரிவுகளாய் - இயற்கையும்
அகாலமும் தான் என்று
யார் சொன்னது? - இங்கு
சிலர் மரணமடைந்தபடி
நடைப்பிணமாய் வாழ்கிறார்களே!
அவர்கள் எந்த மரணத்தை எய்தினார்கள்
என்று அவர்களுக்கே புரியவில்லையே! 


இழந்து போன வாழ்க்கையை
இன்னும் தேடுகிறது பல நெஞ்சங்கள்...
குண்டுகள் மட்டும் அல்ல - ஏக்கங்களை
சுமந்த அந்த விழிகளும் தான்
என் நெஞ்சை துளைக்கிறது...

வெற்றிகளைக் கொண்டாட
புதிய முறை ஒன்று
அறிமுகமாகிறது இன்று - நிர்வாணம்!
ஆடைகளைத் தேடி சில உடல்கள்
அங்கே அலையும் போதெல்லாம்

இதோ எம் பெட்டிக்குள் உடலைத்
தேடிய படி சில ஆடைகள்..


தாய் மானம் காக்க நினைத்த  -பல
நெஞ்சங்கள் இன்று தன் மானம்
காக்க முடியாத நிலையில் -
நிர்வாணமாய், நிர்க்கதியாய்,
பேச வார்த்தைகள் இன்றி,
வடிக்க கண்ணீர் இன்றி,
அவமானத்தில் உடல் துடிக்க,
ஆத்திரத்தில் நெஞ்சு துடிக்க,
பசியினில் வயிறு துடிக்க,
மரணத்தின் வாயிலில் நின்றாலும்
அவள் வரவு ஏன் இன்னும்
தாமதம் என்று எண்ணங்கள் துடிக்க,
வாடும் - இள நெஞ்சங்களுக்காய்
நானும் ஒரு கணம் பிரார்த்தனை செய்கிறேன்
எமதர்மன் அவர்களை விரைவாய்
அரவணைக்கட்டும் என்று...


நன்றி
என்றும் அன்புடன்
சுகர்னியா

(2009/10/01)  

Thursday, November 4, 2010

அது ஒரு அழகிய காலம்...

அது ஒரு அழகிய காலம்...


கலை நிகழ்வின் கதாநாயகியாம்
கலைமகளிற்கு என் முதல் வணக்கம் - இந்த
கவியரங்கின் கதாநாயகனாம் - ஸ்ரீ
கரன் அண்ணாவிற்கும் என் கவி வணக்கம்.
ஏதேதோ சொல்லவென்று - நெஞ்சோடு
கவி சுமந்து, சொல்லோடு சுதி சேர்க்க
வந்திருக்கும் என் சகாக்களுக்கு ஒரு வணக்கம்.
என்னென்னவோ சொல்கிறார்கள் - என்ன?
என்று தான் கேட்போமே என்று
மூச்சிரைக்க ஓடி வந்திருக்கும்
அவையினருக்கும் நல் வணக்கம்...
எனக்கு சொல்லலையே என்று
எவரேனும் முகம் சுழித்தால்,
சொல்ல மறந்தேன் - எனை மன்னிப்பாயா?
என்று மரியாதையுடன் பல் வணக்கம்...


கவியரங்கம் செய்ய வேணும்
கவி பாட வா என்று
கனிவோடு அழைத்தார்கள்.
தலையங்கம் எதுவென்று
தலைவரை நான் கேட்டேன்
"அது ஒரு அழகிய காலம்" என்றார்.
தலையை சொறிந்து விட்டு
"எது ஒரு அழகிய காலம்" என்றேன்.
இதுவரை அது எது என்று
பதில் ஏதும் கிடைக்கவில்லை...




தாயின் கருவறைக்குள்
நித்தமும் சேட்டை செய்தபடி
சத்தமின்றி சயனித்த அந்தக் காலமோ?
மண் தரையில் பிறந்து
தாயின் மடியில் தவழ்ந்து
மண் சோறு சாப்பிட்ட அந்தக் காலமோ?


வாழ்க்கை எதுவென்றும்
வண்ணங்கள் பலவென்றும்
புரியாத வயதில் - இது
என் மேசை, அது என் கதிரை,
அவ என் டீச்சர் - என்று
சில்லறை சண்டைகள்
போட்ட - பள்ளிப் பருவம் தான்
அந்த அழகிய காலமோ?


பல வண்ணப் பூக்களிலே
எந்தன் பூ எங்கே என்று
தேடி அலையும் பட்டாம்
பூச்சியாய் - எட்டு வைத்த
யௌவனப் பருவம் தான்
அந்த அழகிய காலமோ?


என்ர டீச்சர் இல்லாமல்,
என்ர பிரண்ட்ஸ் இல்லாமல்,
 என்ர ஸ்கூல் இல்லாமல்
எப்படி நான் இனி..... என்று
கண்ணீர் சிந்திய காலங்களும்,
அந்த அக்கா கம்பசுக்கு
போபோறா என்று - ஊர்
முழுக்க கதை பேச - ஏதோ
நிலாவுக்கே போபோற மாதிரி
சைக்கிளில் பவனி வந்த
காலங்களும் கூட ஓர் அழகிய காலம் தானோ?


ராகிங் இற்கு பயத்தில,
அண்ணாமாரைக் காணும் போதெல்லாம்
அர்த்தமே இல்லாமல் - ஆயிரம் அண்ணா சொல்லி
அத்தனை பல்லும் தெரிய
அசட்டுச் சிரிப்புக்களை உதிர்த்துப் போன
காலங்களும் கூட ஓர் அழகிய காலம் தானோ?


எப்படா கம்பஸ் முடியும்?
என்று புலம்பியவர்கள் எல்லாம்
வேலைக்குப் போனபின் - ஒரு பாடம்
பெயில் வந்தாலும் பரவாயில்லடா...
கம்பசில் இன்னும் கொஞ்சம்
விடமாட்டாங்களா? என்று
புலம்புவதைக் கேட்கும் பொழுதுகள் கூட
ஓர் அழகிய காலம் தானா?


சத்தமின்றி மரணித்துப் போன
எம் அவலங்களையும்...
சாகாவரம் கொண்ட நம்
சாதனைச் சுவடுகளையும்...
நினைத்துப் பார்த்தால்
கண்கள் பனித்தாலும் - நெஞ்சில்
ஊற்றெடுக்கும் உத்வேகமான
சிந்தனைப் பொழுதுகளும் கூட
அழகிய காலங்களா?????


புதை குழிக்குள் மூடாமலே
புதையுண்ட உறவுகளின்,
தீயை மூட்டாமலே
கருகிப் போன தோழர்களின்,
நினைவுப் புதையல்களை
முட்கம்பிகளின் இடையில்
பத்துநிமிட இடைவெளியில்
பகிர்ந்து கொண்ட காலங்களும்,
எந்த ஆறுதல் வார்த்தைகளும்
ஆராதிக்காது என்பதால் - மௌனமாய்
விழியில்  மழை பெய்து,
விடை பெற்ற காலங்களும் - இன்று


சரித்திரங்கள் மறைக்கப்பட்டு,
சாதனைகள் மறக்கப்பட்டு,
கண்துடைப்பு நிகழ்ச்சிகளில்
களியாட்டம் பல போட்டு,
இல்லாத வானத்தில்
இறக்கைகள் பல கொண்டு,
பறந்தாடும் இந்நாளும்
காலங்களில் அழகு தானா????? 


ஐயகோ!!!
காலச் சக்கரங்கள் - வெறும்
வார்த்தைகளுக்குள் மட்டுப்படுவதில்லையே..
இத்தனை சல்லடை செய்தும்
அழகிய காலம் எதுவென்று
அரங்கேற்ற முடியவில்லையே...
ஆம்... உண்மை தான்...
அழகிய காலங்களைத் தேடியும்,
காலங்களில் அழகைத் தேடியும்,

அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சையாக,
அலையும் எம் பொழுதுகள் எல்லாம்
அந்தரங்க மேடையில் வினா தொடுத்து
ஏக்கங்கள்
மட்டுமே விடைகளாகி
பெருமூச்சொன்று தொடரும்... என்றாகிறது
அது ஒரு அழகிய காலத்தில்...



நன்றி
என்றும் அன்புடன்
சுகர்னியா
( நவராத்திரி விழா, 
மொறடுவை பல்கலைக்கழகம்)
2010/10/15